Monday, January 19, 2009

சைக்கிள்...

நான் முதலில் சைக்கிளை ஓட்டக் கற்றுக்கொளவடைவிட நீச்சலே கற்றுக்கொண்டேன். நீரில் அதிக சாகசம் செய்ததுண்டு. சரி தலைப்பு வாகனம் என்றுள்ளதால் சைக்கிளுக்கு வருவோம்.

முதன் முதலில் சைக்கிளைக் கற்கும்பொழுது அது பின்னாளில் என் வாழ்க்கைக்கும் கல்வி கற்பதற்கும் பேருதவியாக இருக்கும் என அப்பொழுது எனக்குத் தெரியாது.

எங்கள் வீட்டில் இருநத ராலே சைக்கிள்தான் முதல் ஆசான். (நிலாவின் சைக்கிள் என்றொரு சிறுகதையில் பதிந்திருக்கின்றேன்.) ராலே சைக்கிள் என்றால் எடையில்லாமல் எளிதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது மாபெருந்தவறு. அது கடோத்கஜனின் கணம். என்னால் அதனை உருட்டக்கூட முடியாது.

வீட்டிற்குத் தெரியாமல் நைஸாக லவட்டிக்கொண்டு உருட்டிக்கொண்டே பின்னர் குரங்கு பெடல்... கீழே விழுந்து பல முறை கால் முட்டி பெயர்ந்து.... முதுகிலும் பல விழுப்புண்கள் பெற்று.... சில சமயங்களில் பஸ்காரன் மீதும் மேதி.... மரத்தின் மீது மோதி.... பல விழுப்புண் சரித்திரம் இருக்கின்றது.

இதற்குத்தானோ சிறுவயதில் கற்கக்கூடாது என்பது....? ஏனெனில் என் தங்கை சைக்கிள்விடக் கற்றுக்கொள்ளும்பொழுது(கல்லூரிக்காலங்கள் என்றே நினைவு) மிக லாவகமாக எளிதாக ஒரு விழுப்புண்கூட இல்லாமல் கற்றுக்கொண்டுவிட்டாள்.

பின்னர் இந்த சைக்கிளில்தான் தினமும் 21 + 21 கிமீ கல்லூரிக்கும்... பின்னர் நான் என் பெற்றோர்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து சிவகாசிக்கருகேயுள்ள நாரணாபுரம் என்ற கிராமத்திற்கு ஒவ்வொரு வெள்ளி மாலையிலும் சைக்கிளில் கிளம்பிவிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் அங்கிருந்தே அருப்புக்கோட்டைக் கல்லூரிக்கு (சொல்லொணாத் தொலைவு) பயணம்....என் முதுநிலை படிக்கும் காலத்தில் விடுமுறையில் கன்யாகுமரிவரை (மூன்று நண்பர்களை ப்ரைன் வாஷ் செய்து) சைக்கிள் யாத்திரை செல்லமுடிந்தது.


நான் படித்த அதே கல்லூரியிலேயே பின்னாளில் கல்லூரிப்பேராசானாகப் பணியிலமர்ந்தபொழுது தினமும் சைக்கிள்தான். எங்கு நகர்வலம் போனாலும் சைக்கிள்தான்.....

என் வாழ்க்கையில் கல்வி கற்று அதன் மூலம்(கல்லூரி பேராசிரியர்) சம்பாதித்த முதல் சம்பாத்தியத்தில் வாங்கியது சாட்சாத் சைக்கிளேதான்....!

அவ்வளவு ஏன் 2001 ல் கூட TIDEL Parkல் பணியிலிருந்தபொழுது மடிப்பாக்கத்திலிருந்து தினமும் TIDEL Parkற்கு சைக்கிள் சவாரிதான். டைடல் பார்க்கில் அனைவரும் கார், பைக் என வலம் வருவர். அட்லீஸ்ட் ஒரு ஸ்கூட்டியிலாவது வரவேண்டும். நானோ வெறும் சைக்கிள். வாயிற்காவலன், முதல் ஒரு மாதம் வரை விடாமல் தினமும் தகராறு செய்வான். அதன்பின்னர் அவனுக்கு நான் பணிபுரியும் அந்த ஃபார்ச்சூன் 500 கம்பெனியின் ஐடி இதெல்லாம் காட்டியே சென்றாலும் அவன் நான் அங்கே பணிபுரியும் ஒரு மென்பொருளாளன் என நம்பவே மாட்டான். எல்லாம் பகட்டு உலகமடா சாமி என நினைத்தேன்.

எனக்கு சைக்கிளைத் தவிர TVS-50, TVS Champ மட்டுமே ஓட்டத் தெரியும். இப்பொழுதும் எனக்கு சைக்கிளின் மீது அலாதி காதல்.

நீண்ட நெடிய தனிமையான சைக்கிள் பயணத்தில்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், நியூட்டனும் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள்.
சில சமயங்களில் கல்லூரிக் கதாநாயகிகள் என் மனத்திரையில் டூயட் பாடிக்கொண்டிருப்பர்.

சில சமயங்களில் பெளதிகப் பேராசான்களுடன் நீண்டு விவாதிப்பேன். அவர்களது கூற்றில் உடன்பாடு இல்லை என்பேன். பெளதிகத்தில் காதல் வரக் காரணம் சைக்கிள் பயணமே.

இந்த சைக்கிள் பயணத்தில்தான் “கோயிலும் பெளதிகமும்...”, “கராத்தே கலையும் பெளதிகமும்...” "A Vehicle without fuel" "Low cost Iron Box" "Radio without power" "Electric Current from Lemon" எனப் பல ஆச்சரியங்களைக் கண்டுகொள்ளமுடிந்தது. முது்நிலையில் Council of Scientific and Industrial Research கழகம் எங்கள் பல்கலைக் கழகத்தில் நடத்திய ஒரு கண்காட்சியில் என்னுடைய "Chirping Cricket", "Human Electrical Resistivity ", "LEDScope"(இது CRO போன்று செயல்படக்கூடிய ஒன்று. விலை மிகவும் மலிவு.) மற்றபிறவற்றினாலும் என்னால் பிரகாசிக்க முடிந்தது.

பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபொழுது என்னை நான் நன்கு வெளிப்படுத்த முடிந்தது.



சைக்கிள் பழகும்பொழுது என் கனவெல்லாம் சைக்கிளில் சுற்றுவதாகவே இருக்கும். வகுப்பறையில் வாத்தியார் பாடம் நடத்தும்பொழுதும் நான் மனத்திரையில் சைக்கிள்விட்டுக்கொண்டிருப்பேன்.

ஏனோ தெரியவில்லை.... இன்று காரினில் பயணித்தாலும் சைக்கிள் மீது இன்னமும் காதல்...... ம்....அது ஒரு கனாக்காலம்....!

No comments: