Monday, June 9, 2008

செல்வனின் மடலுக்கு ரிஷியின் பதில்....

2008/6/9 செல்வன் :

ஷைலஜா என்ற பேரை சைலசா என்று தனித்தமிழ் ஆர்வலர்கள் எழுதுவார்கள்.


>>>>>> ஷைலஜா ----> மலைமகள்

ஸ்டாலின் என்பதை இசுடாலின் என்பார்கள்.மாஸ்கோ மாசுகோ ஆகும்.

பீட்டர் பேதுரு ஆவார்.தாம்ஸ் தோமைய்யர் ஆவார்.அர்னால்ட்

>>>> தோமைய்யர் என்பதில் ஐயர் என்பது தமிழ் வார்த்தை அல்ல.

ஷ்வார்சனேகர் என்னாவர்ன்னு தெரியலை.கூடிய விரைவில் அந்த பெயரும் தமிழ்படுத்தப்படலாம்:-)

>>>> இசுவார்சனேகர் என்றே அழைக்கலாமே...!

காமேஷ் என்றாம் காம சிவன்னு பொருளில்லை.ஏனப்பா அந்த அழகான பேரை இப்படி கொல்றீங்க?பெயர்சொல்லை மொழிபெயர்த்தால் விபரீதமாகிவிடும்யா.

டிக்சன் என்ற பேரை என்னன்னு மொழிபெயர்ப்பீங்க?ஆண்குறியின் மகன்னா?:-)

நிர்மலா = நிர்+மலம் என்பது வடமொழி சொல்.தமிழில் அதை மொழிபெயர்த்தா கந்தரகோளமாகிடும்யா :-)

>>>> நிர்மலம் ---> கசடுகளற்ற/மாசற்ற

காமேஷ் என்பது அழகான பொருள் பதிந்த பெயர்.அந்த பொருளின் அர்த்தத்தை விளக்கினா பத்தி பத்தியா எழுதலாம்.

காமராஜன் என்று நம்ம கர்மவீரர் காமராஜருக்கு பெயர் சூட்டினார்கள்.ஏன்?அவர் 'காமத்துக்கு மன்னனாக' இருக்கணும்னா?காமராஜன்,காமேசன் எல்லா பெயருக்கு ஒரே பொருள் தான்.அதாவது "காமத்தை வென்றவன்" தான் காமராஜனான காமேசன்.

மன்மதன் சிவனை காமவசப்பட வைக்கிறேன் என்று கிளம்பி ஈசன் மேல் மலர்க்கணைகளை எய்தான்.ஈசன் காமனை நெற்றிக்கணால் சுட்டெரித்தான்.அப்புறம் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்கி விஷ்ணு மன்மதன் ரதியின் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்னு வரம் கொடுத்தார்.

காமனின் கணைக்கு உலகமே அடிபணியும்போதும் சிவன் அடிபணியவில்லை.காம வசப்படவில்லை.காமனை இப்படி வென்றதால் தான் அவர் காமராஜன் எனவும் காமேசன் எனவும் அழைக்கப்பட்டார்.

இப்படித்தான்யா பொருளின் அர்த்தம் தெரியாமலும், வட மொழி எது தமிழ் எது என்று புரியாமலும் பலபேர் கும்மியடிக்கறாங்க.நம்ம முதல்வர் பேரு தட்சணாமூர்த்தி.வட மொழி பேரை மாத்தி தூய தமிழ் பேர் வைகக்றேன்னு கிளம்பி கருனாநிதின்னு பேரை மாத்திகிட்டார்.அப்புறம் பாத்தா கருணாநிதியும் வடமொழி சொல்தான்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை தமிழ்படுத்தறேன்னு கிளம்பி பரிதிமாற் கலைஞர்ன்னு ஒரு தமிழறிஞர் பேர் வெச்சுகிட்டார்.அப்புறம் பாத்தா பரிதி, மால் என்பதே வடமொழி சொற்கள் தான்.


>>>>>

என் பெயரினை நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் காலங்களில் 'பகலதியன்' என தமிழ்ப் படுத்தி எழுதிக்கொண்டிருந்தேன்.

இரவீந்திரன் ----> இரவி + இந்திரன்

இரவி ---> பகல்
இந்திரன் ---> தேவர்களின் தலைவன் ---> அதியன் (இது சரியா தப்பான்னு அப்ப எனக்குத் தெரியாது....)

தேர்வில் கேட்கப்படும் தமிழ்க் கட்டுரைகளுக்கு நான் என் சொந்தக் கருத்துக்களை அள்ளிவிட்டு '......' என்று பகலதியன் என்ற கவிஞர் கூறுகின்றார்.... பகலதியன் என்ற அறிஞர் கூறுகின்றார் என சரடு விட்டுக்கொண்டிருந்தேன்.

விடைத்தாள் திருத்தும் தமிழாசிரியரும் பலமுறை அவர் யாரோ மிகப்பெரிய அறிஞரோ... நமக்குத்தான் தெரியவில்லையோ என விழிபிதுங்கிடுவதைக் கண்டு ரசித்திருக்கின்றேன்.

அவருக்கு என்னிடம் நேரடியாகக் கேட்கவும் பயம்.... யாரந்த பகலதியன் என்ற அறிஞர்.....?

மற்ற மாணவர்களிடம் தன்னுடைய அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம்....!

எனவே எனக்கு மார்க்குகள் கணிசமாகவே வந்துகொண்டிருந்தன...!!!!! அரசுப் பொதுத்தேர்விலும் இதையே கடைப்பிடித்தேன்....!!!!!

நான் என்னுடைய சொந்தக் கருத்துக்களை தேர்வில் பகலதியன் என்ற அறிஞர் சொல்வது போல் சொல்லும்பொழுது ஏறக்குறைய வள்ளுவர், ஒளவையார் இவர்களெல்லாம் நன்கு பரிச்சயமானதால் அதனை ஒரு அறிஞர் சொல்வது போல் அமைக்க முடிந்தது.....


உதாரணமாக ஒழுக்கம் என்று ஒரு கட்டுரை எழுதவேண்டும்.....

நான் வள்ளுவரை அங்கே கொஞ்சம் இழுப்பேன்... ஒளவையாரைக் கொஞ்சம் இழுப்பேன்.

அப்றம் ஒழுக்கம் என்பது, ‘'தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எந்தக் காலத்திலும் எண்ணம் , சொல், செயல் இவைகளில் தீங்கு இல்லாமல் அமைத்துக்கொள்வதே ஒழுக்கம்...' என்று பகலதியன் என்ற தமிழறிஞர் செப்புகின்றார்.... என கலர் கலராய் ரீல் விட்டுக்கொண்டிருந்தேன்....!!!!!!

திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும்...!!! இந்த வரைமுறையை மறுதலிக்கவும் முடியாது; என்னுடைய சரடு என்றும் அவரால் புரிந்துகொள்ளவும் முடியாது.... ஒரு வேளை பகலதியன் என்ற தமிழறிஞர் மு.வா மாதிரி இருந்திருப்பாரோ அந்தக் காலத்தில் என சிண்டைப் பிய்த்துக்கொள்வார்கள்.

பி.கு: இங்கே ஒழுக்கத்திற்கு நான் கையாண்ட அந்த வரையறை என்னுடையது அல்ல; என் குருவினுடையது.


--
செல்வன்

www.holyox.tk

Thursday, June 5, 2008

அன்புள்ள வைரமுத்து...!

அன்புள்ள வைரமுத்து,

என்னை நினைவிருக்கின்றதா.....?

நானும் நீயும் பலமுறை சந்தித்திருக்கின்றோம்.

நீ என் பேராசான் மாடசாமியுடன் பச்சையப்பனில் ஒன்றாய் தமிழ் படித்தவன்தானே...?

அவர் பாடங்களைச் சொன்னதைவிட உன்னைப் பற்றியும் உன் தமிழைப் பற்றியுமே
எங்களுக்கு அதிகமாய் பரிச்சயம் செய்தார். அன்றைய திரைப்படப் பாடல்களைக் கண்டு வெகுண்டெழுந்தாய்.... அப்படிப்பட்ட பாடல்களைக் கொண்ட திரைச்சுருளினை 'தீக்குச்சிக்குத் தின்னக்கொடுப்போம்...' என்று வெகுண்டாய்.

இதனாலேயே எனக்குப் பிடித்தவனாகிப் போனாய்.

இது ஒரு பொன் மாலைப் பொழுது... என்றாய், முகிலினங்கள் அலைகின்றதே...என்றாய் என்னென்னவே சொன்னாய்... அத்தனையும் இதயத்தை அள்ளும் இலக்கியமாய் இருந்தது அன்றைய நாட்களில்.

திடீரென ஒரு நாள், ‘ஏ.... ஆத்தா... ஆத்தோரமா வாரீயா....?' என்று எங்களுக்கெல்லாம் அதிர்ச்சிவைத்தியம் அளித்தாய்.

உனக்காக அம்மாத ‘வாசல்' என்ற எங்கள் கையெழுத்துப் பிரதிமுழுக்க முழுக்க

‘வைரமுத்தா....? வயிறுமுத்தா....?'

என்று ஒரு நெருப்புக் கட்டுரையை எங்கள் மாணவர்கள் எழுதிட்டோம். உன் வகுப்பு நண்பன் எங்கள் பேராசானுக்குத்தான் அதனின் முதல் பிரதியைக் கொடுத்தோம். எஸ்.பி.கே கல்லூரி மாணவர்களும் எங்களுக்குத் தோள் கொடுத்தனர்.

சிறிது காலத்தில் உன் தண்ணீர் தேசம் படித்தேன்.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

இன்னும் எத்தனையோ.... படித்தேன்...

அவ்வப்பொழுது

‘காந்தி தேசமே காமலீலையாம்... நீதி மன்றமே நியாயம் இல்லையாம்...'
‘எவன்தான் மனிதன்....?'
போன்ற நல்ல சமுதாயப் பாடல்களையும் படைத்தாய்.

மனதினை வருடிடும் 'பூங்காற்றுத் திரும்புமா....? ஏம் பாட்ட விரும்புமா....?' படைத்தாய்.

ஒரு முறை உன்னை மூட்டா என்ற கல்லூரிப் பேராசிரியர் கூட்டத்திற்கு அழைத்திருந்தோம். மேலும் நானும் நீயும் சில இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கின்றோம்.

2001ல் கூட காமராஜர் அரங்கத்தில் ,'வைரமுத்து கவிதைகள்' என்ற உன் நூல்
வெளியீட்டு விழாவிற்குக் கூட வந்திருந்தேன்.

கலைஞர்,கமல், மண்ணின் மைந்தன் மரபு முத்தையா, பேரா ஞானசம்பந்தன்....இப்படி பல சிறப்புப் பிரமுகர்கள்....

அப்பொழுதுதான் நீ, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்' சமைத்துக் கொண்டிருந்தாய். அத்தொடர்
விகடனில் தொடராக வந்தது.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில், கி.ராஜநாராயணின் ‘கோபல்லபுரத்து மக்கள்' விகடனில் தொடராய் வந்தது போல் அதே தாக்கம்....!

இதிகாசத்தில் ஜீவனிருந்தது. நீயே அந்த ஜீவனாகியிருந்தாய். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தினையும் வெகு நுட்பமாக கதையில் நுழைத்தவிதம் அருமை.

‘வைரமுத்து கவிதையில்' குச்சி ஐஸ் திங்கயில... என்ற ஒரு கவிதை ஒரு ஷொட்டு. அப்படியே மண்ணின் வாசனையை நுகர முடிந்தது.

மழையின் காரணமாக எழும் மண்ணின் வாசனையைப் போல் நீ வாழ்ந்த அந்த வட்டாரத்தின் மணத்தினை நுகர முடிந்தது.

அன்றைய காலகட்டங்களில் பிரபல்யமாக இருந்த கவிஞர்களின் வரிசையில் நீயும் அவர்களைப் போல் கல்லூரிப் பேராசிரியனாக வர ஆசைப்பட்டாய்.

ஆனால் மொழிபெயர்ப்பாளனாய் ஆக்கப்பட்டாய். பாரதிராஜாவின் கடைக்கண் பட்டபின் திரைத்துறையில் ஆலமரமாகிப்போனாய். அரசு வேலையை உதறினாய்.... மேலே மேலே என உன் சிறகினை விரித்தாய்.

நான் பலமுறை யோசித்து யோசித்துப் பார்க்கின்றேன்.

வைகை அணைக்கட்டுப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் என்னைப் போல் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து விட்டு எப்படி உன் சிறகினை விரித்தாய்...? எப்படி மேலே பறந்தாய் என ஆராய்கின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைகள்.

அனைவருக்குமே தேவைகள் இருக்கின்றன. அனைவரும் உன் உயரத்தினை எட்டவில்லையே.....?

அன்று உன்னைவிட உயர்ந்த கவிஞர்களும் இருந்தனர். ஆனாலும் நான் எங்கள் முத்தமிழ்க் குழுவிலுள்ள கவிஞன் நிலாரசிகனுக்கு உன்னை மட்டுமே அவனுக்கு முன்மாதிரியாக சொல்லமுடிகின்றது....?

அது எதனால்....?

உன் உச்சிக்குக் காரணம் யார்...?

உன் காதலி பொன்முடியா....?

இல்லை.

அதன் பின் இருக்கும்
ஆழமான காதல் என்பதனை நானறிவேன்.

காதல் மட்டும் இல்லாவிட்டால்
நீ காணாமல் போயிருப்பாய்.

உன்னுள்ளிருக்கும் காதல்
அது-
வேரினைப் போல்
வெளியில் புலப்படவில்லை.

உன்-
உயரத்தைப் பார்க்கும் மக்கள்
வேரினைப் பார்க்கவில்லை.

உன்னிலிருந்து ஒரு பாடம்.
உண்மைக் காதல் என்றுமே தோற்பதில்லை..!
அது வாழ வைக்கும்..!!!

அது
உயிரினை இயங்க வைக்கும்
துடிப்பு இருக்கும்

சுயக் கட்டுப்பாடு
தானாக கைகூடிவரும்
உன்னை
உயரே... உயரே... என
உயர வைத்த அந்த
உயிர் காதலுக்கு

என் வாழ்த்துக்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் என பாரதி சும்மாவா சொல்லியிருப்பான்....?

Wednesday, June 4, 2008

சைக்கிள்....

பைக்கட்டு ---> கைச்சுமைகளைத் தூக்கிச் செல்லும் துணியினாலான பை.

எதார்த்தமான கதை. பாராட்டுக்கள் நிலா. கண்முன்னே மலரும் நினைவுகளைத்
தூண்டிவிடுகின்றது.

எங்கள் அப்பா வீட்டிலும் ஒரு ராலே சைக்கிள் இருந்தது.

அதில் நான் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத்தேர்வு விடுமுறையில் எங்கள்
அப்பா அம்மா வசிக்கும் அந்த ஊருக்குச் செல்லும்பொழுதுதான் நான்
கவட்டைக்காலடித்து சைக்கிள் பழகியிருந்தேன். அந்த சைக்கிளுக்கென்று ஒரு
மிகப்பெரிய சரித்திரமிருந்தது. அதன் கணம் எவராலும் தாங்க இயலாத பேய்
கணம். (பளு என்ற கணத்திற்கு இந்த 'ண' வா இல்லை இந்த 'ன' வா...?).

எங்கப்பா அதனை ஒரு கல்லூரி படிக்கும் இளைஞனிடம் செகண்ட் ஹேண்ட்டாக
வாங்கியிருந்தார். அது 1970ல். அதனை ஒரு குழந்தையைவிட மிகவும் மேலாகக்
கவனித்துக் கொண்டிருந்தார். அதனைப் பற்றி மிகவும் பெருமையாகச்
சொல்லிக்கொண்டிருப்பார். அதனை யாருக்கும் தரவும் மாட்டார்.

ஆனாலும் அவர் டெவுனுக்கு பஸ்ஸில் பயணிக்கும்பொழுது அவருக்குத் தெரியாமல்
நான் அந்த சைக்கிளை நைஸ்ஸாக அபேஸ் பண்ணி அந்த கிராமத்தின் புதிய புதிய
இடங்களை வாஸ்கோடா காமா, கொலம்பஸ் மாதிரி கண்டுபிடித்த ஒரு திருப்தி.
பலமுறை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து முட்டியிலும் கால்களிலும்
முதுகிலும் என பல இடங்களில் வீரத் தழும்புகளும் சில முறை நீண்ட
நாட்களுக்கு வலியிருக்கும்படியான நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன.
திட்டுக்களைப் பற்றி நான் சொல்லியா தெரியவேண்டும்...? அதுவும் அம்மா
அப்பா இருவருமே வாத்தியார்கள் அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியர் என்றால்
அவர்களின் கண்டிப்பு எப்படி இருக்கும் என்று நான் சொல்லியா
தெரியவேண்டும். வாத்தியார் பையனாகப் பிறப்பது மிகப்பெரிய தண்டனை....!

ஆனாலும் அந்த சைக்கிளின் மீது எனக்கு அபாரமான காதல். அந்த கனம், அதன்
கம்பீரம், அதன் நளினம், அதன் பிரேக் பிடிக்காதத் தன்மை ,

(ராலே சைக்கிளில் பிரேக் அடிக்கடி ஃபெயிலியராகும்...! அது ஏன் என்பதை
நான் கல்லூரியில் ஆசிரியனாக இருந்திட்டபொழுது Friction என்ற பாடத்தினை
நடத்தும்பொழுது மாணவர்களுக்கு இதைத்தான் ஒரு மினி ப்ராஜக்ட்டாகக்
கொடுத்திருந்தேன்...இதிலிருந்துதான் இண்டர்னல் எக்ஸாம் நடத்தி மார்க்
போட்டேன்..! நான் பரீட்சை நடத்தும் விஷயம் கொஞ்சம் சுவாரசியமானது. எத்தனை
புத்தகங்கள் வேண்டுமானாலும் பக்கத்தில் வைத்துப் புரட்ட அனுமதியுண்டு.
பார்த்து எழுத அனுமதியளித்திருந்தேன். ஆனாலும் ஒரு மாணவன் கூட 100க்கு 10
மதிப்பெண்களைத் தாண்டியதில்லை. ஏனெனில் எல்லாமே மூளையைப் பயன்படுத்தி
விடையளிக்கும்படி வினாத்தாட்களை அமைத்திருந்தேன். பின்னர் துறைத்தலைவர்
தலையிட்டு அதனை மாற்றி எல்லோரையும்போல் அமைக்கும்படி ஆனது...! அந்த முறை
மட்டுமிருந்திருந்தால் எம்.ஐ.டியில் மட்டுமே சேர முடிந்த என் மாணவர்கள்
ஐஐடியிலோ அல்லது மாசாசூட்சிலிருக்கும் எம்.ஐ.டியிலோ மிக எளிதாக அட்மிஷன்
கிடைத்திருக்கும். )

அது அந்தக்கால சைக்கிளாக்கும் என்ற பெருமை, அது சந்தித்த விபத்துக்கள் என
ஒரு புராதன சைக்கிளாய் இருந்தது. நான் கல்லூரிக்குப் படிப்பதற்காக என்
பெற்றோர்களிடம் வந்தபொழுது அந்த சைக்கிளில்தான் 21 கிமீ எங்கள்
கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்குப் பயணிக்க முடிந்தது. பின்னர்
அதன் கனம் கருதி ஒரு எளிமையான சைக்கிளை சொற்ப விலைக்கு வாங்கினேன். இந்த
சைக்கிளை என் கடைத்தம்பி அவன் தன் பாடசாலைக்கு எடுத்துச்சென்றான்.

ஒரு பொன்மாலைப் பொழுதினில் அவன் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைத்
தந்தான்.

அந்த சைக்கிளை அவன் விற்றுவிட்டதாகச் சொன்னான். வெறும் 250 ரூபாய்க்கு
விற்றுவிட்டதாகச் சொன்னான். அவன் அப்பொழுது 8 ஆம்
வகுப்புப்படித்துக்கொண்டிருந்தான்.

எனக்கோ கோபம் கோபமாக வந்தது. வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினரையே
இழந்ததுபோலிருந்தது. அந்த செயல் எனக்கு மிகவும் மன வருத்தத்தினைக்
கொடுத்தது. இப்பொழுதும் அந்த சைக்கிள் என் நினைவலைகளில் தவழ்ந்து
வருகின்றது.

Monday, June 2, 2008

பிறந்த நாள் வாழ்த்து....

நானே மறந்துவிட்ட என் பிறந்த நாளை முத்தமிழ்க் குடும்பம் கொண்டாடுவதில்
மிக்க மகிழ்ச்சி.

நான் வழக்கமாகப் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவேன் என்பது மிகவும்
சுவாரசியமான விசயம். அப்படி எதுவுமே கொண்டாடுவதில்லை என்பதே நான் சொல்ல
வருவது. ஏனெனில் அந்தக் கிராமத்தில் அப்பொழுது அதைப் பற்றிய
பிரக்ஞையெல்லாம் எங்களுக்கில்லை.

ஒரு முறை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது என்னைப் பார்ப்பதற்காக வந்த
எங்கள் அம்மா எனக்காக பிறந்த நாள் உடை என சந்தனக் கலரில் ஒரு நைலான்
சட்டையும் ஒரு அரைக்கால் சட்டையும் வாங்கி வந்திருந்தார். அவரிடம் எனக்கு
அப்பொழுது அதிகமான பரிச்சயம் இல்லை.

அப்பொழுதுதான் எனக்குத் தெரியும். பிறந்த நாள் என்று ஒன்று
இருக்கின்றதென்றும் அதெல்லாம் நகர்ப்புறத்து மக்கள் கொண்டாடுவார்கள்
என்பதும் தெரிய வந்தது. என்னுடைய மற்றைய சகோதர சகோதரிகளெல்லாம்
வருடந்தோறும் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம்.

ஏனெனில் நான் அவர்களிடமின்றி எங்கள் பெரியம்மா அவர்களின் வளர்ப்பில்
தனியாக வளர்க்கப்பட்டதனால் நடப்புலகிற்கும் என்னுலகிற்கும் நிறைய
வித்தியாசங்களிருந்தன. பிறந்த நாள் அன்று மிட்டாய் கொடுக்க வேண்டும் என
எனக்குக் கற்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை யாராவது பாடசாலையில்
புதிதாக சேர்ந்தால் அனைவருக்கும் மிட்டாய் கிடைக்கும். அல்லது சுதந்திர
தினமோ குடியரசு தினமோ எனில் ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். அப்பொழுதுதான்
பிறந்த நாளுக்கும் மிட்டாய் கொடுக்கவேண்டும் என்ற ஒரு விஷயமே
தெரியந்வந்தது.

அதன் பின்னர் வெகு வருடங்கள் அந்த நினைப்பின்றியே இருந்தேன்.
கொண்டாடுவதுமில்லை. பின்னர் மேற்படிப்பிற்காக எங்கள் பெற்றோரிடம்
வரவேண்டிய சூழல். அவர்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து அருகிலுள்ள
அருப்புக்கோட்டை டிஏ கல்லூரிக்கு ஒரு 21 கிமீ சைக்கிள் பயணம். அந்த
சைக்கிள் பயணத்தில்தான் நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ரூதர்ஃபோர்டும் வெகு
நெருங்கிய நண்பர்களாயினர். அவர்கள் எனக்கு பெளதிகம் சொல்லிக்கொடுத்தது
என் சைக்கிள் பயணத்தில்தான். உடல் சைக்கிளியிக்குவதிலிருந்தாலும்
மனமெல்லாம் ஐன்ஸ்டீனுடனும் நியூட்டனுடனும் பாடம்
படித்துக்கொண்டிருக்கும். வாத்தியார்களிடமிருந்து பயின்ற பாடங்களைவிட
இவர்களிடம் பயின்ற பாடங்களே அதிகம். வாழ்க்கை பாடங்கள் கூட அவ்வப்பொழுது
போதித்தனர் பெளதிகத்துடன்.

அப்பொழுதுதான் அந்தக் கல்லூரிதான் முதன் முதலில் பிறந்த நாள் பிரக்ஞையை
வளர்த்தது. சக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஊதி சினிமாவில் வருவது போன்று
கொண்டாடியது எனக்கு மிகவும் விநோதமாகப் பட்டது.

அப்பொழுதெல்லாம் நான் இப்படித்தான் நினைத்துக்கொள்வேன். பிறந்தநாள் எனில்
ஒளிப் பிரவாகமாகவல்லவா இருக்கவேண்டும்....? ஆனால் எரியும்
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து இருள் மயமாக்குவது ஏன்....? என்று.

எனவே என் பிறந்த நாளை நான் வித்தியாசமாகக்கொண்டாட எண்ணி, பிறந்த நாளன்று
உலக சமாதானத் தவம் என்ற ஒன்றினை இயற்றி தவம் இயற்றுவது இயல்பாகிவிட்டது.
தவத்திற்குப் பின் சிறிது வேப்பிலை (இன்றிலிருந்து உடல்நலம் காப்பேன்
என்பதற்கு ஒரு சாம்யம்.... ).

அதன்பின்னர் எதாவது ஒரு தர்ம காரியம்.

வாழ்க வையகம்... வாழ்க வையகம்... என வாழ்த்து....