Monday, June 2, 2008

பிறந்த நாள் வாழ்த்து....

நானே மறந்துவிட்ட என் பிறந்த நாளை முத்தமிழ்க் குடும்பம் கொண்டாடுவதில்
மிக்க மகிழ்ச்சி.

நான் வழக்கமாகப் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவேன் என்பது மிகவும்
சுவாரசியமான விசயம். அப்படி எதுவுமே கொண்டாடுவதில்லை என்பதே நான் சொல்ல
வருவது. ஏனெனில் அந்தக் கிராமத்தில் அப்பொழுது அதைப் பற்றிய
பிரக்ஞையெல்லாம் எங்களுக்கில்லை.

ஒரு முறை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது என்னைப் பார்ப்பதற்காக வந்த
எங்கள் அம்மா எனக்காக பிறந்த நாள் உடை என சந்தனக் கலரில் ஒரு நைலான்
சட்டையும் ஒரு அரைக்கால் சட்டையும் வாங்கி வந்திருந்தார். அவரிடம் எனக்கு
அப்பொழுது அதிகமான பரிச்சயம் இல்லை.

அப்பொழுதுதான் எனக்குத் தெரியும். பிறந்த நாள் என்று ஒன்று
இருக்கின்றதென்றும் அதெல்லாம் நகர்ப்புறத்து மக்கள் கொண்டாடுவார்கள்
என்பதும் தெரிய வந்தது. என்னுடைய மற்றைய சகோதர சகோதரிகளெல்லாம்
வருடந்தோறும் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம்.

ஏனெனில் நான் அவர்களிடமின்றி எங்கள் பெரியம்மா அவர்களின் வளர்ப்பில்
தனியாக வளர்க்கப்பட்டதனால் நடப்புலகிற்கும் என்னுலகிற்கும் நிறைய
வித்தியாசங்களிருந்தன. பிறந்த நாள் அன்று மிட்டாய் கொடுக்க வேண்டும் என
எனக்குக் கற்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை யாராவது பாடசாலையில்
புதிதாக சேர்ந்தால் அனைவருக்கும் மிட்டாய் கிடைக்கும். அல்லது சுதந்திர
தினமோ குடியரசு தினமோ எனில் ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். அப்பொழுதுதான்
பிறந்த நாளுக்கும் மிட்டாய் கொடுக்கவேண்டும் என்ற ஒரு விஷயமே
தெரியந்வந்தது.

அதன் பின்னர் வெகு வருடங்கள் அந்த நினைப்பின்றியே இருந்தேன்.
கொண்டாடுவதுமில்லை. பின்னர் மேற்படிப்பிற்காக எங்கள் பெற்றோரிடம்
வரவேண்டிய சூழல். அவர்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து அருகிலுள்ள
அருப்புக்கோட்டை டிஏ கல்லூரிக்கு ஒரு 21 கிமீ சைக்கிள் பயணம். அந்த
சைக்கிள் பயணத்தில்தான் நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ரூதர்ஃபோர்டும் வெகு
நெருங்கிய நண்பர்களாயினர். அவர்கள் எனக்கு பெளதிகம் சொல்லிக்கொடுத்தது
என் சைக்கிள் பயணத்தில்தான். உடல் சைக்கிளியிக்குவதிலிருந்தாலும்
மனமெல்லாம் ஐன்ஸ்டீனுடனும் நியூட்டனுடனும் பாடம்
படித்துக்கொண்டிருக்கும். வாத்தியார்களிடமிருந்து பயின்ற பாடங்களைவிட
இவர்களிடம் பயின்ற பாடங்களே அதிகம். வாழ்க்கை பாடங்கள் கூட அவ்வப்பொழுது
போதித்தனர் பெளதிகத்துடன்.

அப்பொழுதுதான் அந்தக் கல்லூரிதான் முதன் முதலில் பிறந்த நாள் பிரக்ஞையை
வளர்த்தது. சக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஊதி சினிமாவில் வருவது போன்று
கொண்டாடியது எனக்கு மிகவும் விநோதமாகப் பட்டது.

அப்பொழுதெல்லாம் நான் இப்படித்தான் நினைத்துக்கொள்வேன். பிறந்தநாள் எனில்
ஒளிப் பிரவாகமாகவல்லவா இருக்கவேண்டும்....? ஆனால் எரியும்
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து இருள் மயமாக்குவது ஏன்....? என்று.

எனவே என் பிறந்த நாளை நான் வித்தியாசமாகக்கொண்டாட எண்ணி, பிறந்த நாளன்று
உலக சமாதானத் தவம் என்ற ஒன்றினை இயற்றி தவம் இயற்றுவது இயல்பாகிவிட்டது.
தவத்திற்குப் பின் சிறிது வேப்பிலை (இன்றிலிருந்து உடல்நலம் காப்பேன்
என்பதற்கு ஒரு சாம்யம்.... ).

அதன்பின்னர் எதாவது ஒரு தர்ம காரியம்.

வாழ்க வையகம்... வாழ்க வையகம்... என வாழ்த்து....

No comments: