Wednesday, June 4, 2008

சைக்கிள்....

பைக்கட்டு ---> கைச்சுமைகளைத் தூக்கிச் செல்லும் துணியினாலான பை.

எதார்த்தமான கதை. பாராட்டுக்கள் நிலா. கண்முன்னே மலரும் நினைவுகளைத்
தூண்டிவிடுகின்றது.

எங்கள் அப்பா வீட்டிலும் ஒரு ராலே சைக்கிள் இருந்தது.

அதில் நான் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத்தேர்வு விடுமுறையில் எங்கள்
அப்பா அம்மா வசிக்கும் அந்த ஊருக்குச் செல்லும்பொழுதுதான் நான்
கவட்டைக்காலடித்து சைக்கிள் பழகியிருந்தேன். அந்த சைக்கிளுக்கென்று ஒரு
மிகப்பெரிய சரித்திரமிருந்தது. அதன் கணம் எவராலும் தாங்க இயலாத பேய்
கணம். (பளு என்ற கணத்திற்கு இந்த 'ண' வா இல்லை இந்த 'ன' வா...?).

எங்கப்பா அதனை ஒரு கல்லூரி படிக்கும் இளைஞனிடம் செகண்ட் ஹேண்ட்டாக
வாங்கியிருந்தார். அது 1970ல். அதனை ஒரு குழந்தையைவிட மிகவும் மேலாகக்
கவனித்துக் கொண்டிருந்தார். அதனைப் பற்றி மிகவும் பெருமையாகச்
சொல்லிக்கொண்டிருப்பார். அதனை யாருக்கும் தரவும் மாட்டார்.

ஆனாலும் அவர் டெவுனுக்கு பஸ்ஸில் பயணிக்கும்பொழுது அவருக்குத் தெரியாமல்
நான் அந்த சைக்கிளை நைஸ்ஸாக அபேஸ் பண்ணி அந்த கிராமத்தின் புதிய புதிய
இடங்களை வாஸ்கோடா காமா, கொலம்பஸ் மாதிரி கண்டுபிடித்த ஒரு திருப்தி.
பலமுறை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து முட்டியிலும் கால்களிலும்
முதுகிலும் என பல இடங்களில் வீரத் தழும்புகளும் சில முறை நீண்ட
நாட்களுக்கு வலியிருக்கும்படியான நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன.
திட்டுக்களைப் பற்றி நான் சொல்லியா தெரியவேண்டும்...? அதுவும் அம்மா
அப்பா இருவருமே வாத்தியார்கள் அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியர் என்றால்
அவர்களின் கண்டிப்பு எப்படி இருக்கும் என்று நான் சொல்லியா
தெரியவேண்டும். வாத்தியார் பையனாகப் பிறப்பது மிகப்பெரிய தண்டனை....!

ஆனாலும் அந்த சைக்கிளின் மீது எனக்கு அபாரமான காதல். அந்த கனம், அதன்
கம்பீரம், அதன் நளினம், அதன் பிரேக் பிடிக்காதத் தன்மை ,

(ராலே சைக்கிளில் பிரேக் அடிக்கடி ஃபெயிலியராகும்...! அது ஏன் என்பதை
நான் கல்லூரியில் ஆசிரியனாக இருந்திட்டபொழுது Friction என்ற பாடத்தினை
நடத்தும்பொழுது மாணவர்களுக்கு இதைத்தான் ஒரு மினி ப்ராஜக்ட்டாகக்
கொடுத்திருந்தேன்...இதிலிருந்துதான் இண்டர்னல் எக்ஸாம் நடத்தி மார்க்
போட்டேன்..! நான் பரீட்சை நடத்தும் விஷயம் கொஞ்சம் சுவாரசியமானது. எத்தனை
புத்தகங்கள் வேண்டுமானாலும் பக்கத்தில் வைத்துப் புரட்ட அனுமதியுண்டு.
பார்த்து எழுத அனுமதியளித்திருந்தேன். ஆனாலும் ஒரு மாணவன் கூட 100க்கு 10
மதிப்பெண்களைத் தாண்டியதில்லை. ஏனெனில் எல்லாமே மூளையைப் பயன்படுத்தி
விடையளிக்கும்படி வினாத்தாட்களை அமைத்திருந்தேன். பின்னர் துறைத்தலைவர்
தலையிட்டு அதனை மாற்றி எல்லோரையும்போல் அமைக்கும்படி ஆனது...! அந்த முறை
மட்டுமிருந்திருந்தால் எம்.ஐ.டியில் மட்டுமே சேர முடிந்த என் மாணவர்கள்
ஐஐடியிலோ அல்லது மாசாசூட்சிலிருக்கும் எம்.ஐ.டியிலோ மிக எளிதாக அட்மிஷன்
கிடைத்திருக்கும். )

அது அந்தக்கால சைக்கிளாக்கும் என்ற பெருமை, அது சந்தித்த விபத்துக்கள் என
ஒரு புராதன சைக்கிளாய் இருந்தது. நான் கல்லூரிக்குப் படிப்பதற்காக என்
பெற்றோர்களிடம் வந்தபொழுது அந்த சைக்கிளில்தான் 21 கிமீ எங்கள்
கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்குப் பயணிக்க முடிந்தது. பின்னர்
அதன் கனம் கருதி ஒரு எளிமையான சைக்கிளை சொற்ப விலைக்கு வாங்கினேன். இந்த
சைக்கிளை என் கடைத்தம்பி அவன் தன் பாடசாலைக்கு எடுத்துச்சென்றான்.

ஒரு பொன்மாலைப் பொழுதினில் அவன் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைத்
தந்தான்.

அந்த சைக்கிளை அவன் விற்றுவிட்டதாகச் சொன்னான். வெறும் 250 ரூபாய்க்கு
விற்றுவிட்டதாகச் சொன்னான். அவன் அப்பொழுது 8 ஆம்
வகுப்புப்படித்துக்கொண்டிருந்தான்.

எனக்கோ கோபம் கோபமாக வந்தது. வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினரையே
இழந்ததுபோலிருந்தது. அந்த செயல் எனக்கு மிகவும் மன வருத்தத்தினைக்
கொடுத்தது. இப்பொழுதும் அந்த சைக்கிள் என் நினைவலைகளில் தவழ்ந்து
வருகின்றது.

No comments: