Thursday, June 5, 2008

அன்புள்ள வைரமுத்து...!

அன்புள்ள வைரமுத்து,

என்னை நினைவிருக்கின்றதா.....?

நானும் நீயும் பலமுறை சந்தித்திருக்கின்றோம்.

நீ என் பேராசான் மாடசாமியுடன் பச்சையப்பனில் ஒன்றாய் தமிழ் படித்தவன்தானே...?

அவர் பாடங்களைச் சொன்னதைவிட உன்னைப் பற்றியும் உன் தமிழைப் பற்றியுமே
எங்களுக்கு அதிகமாய் பரிச்சயம் செய்தார். அன்றைய திரைப்படப் பாடல்களைக் கண்டு வெகுண்டெழுந்தாய்.... அப்படிப்பட்ட பாடல்களைக் கொண்ட திரைச்சுருளினை 'தீக்குச்சிக்குத் தின்னக்கொடுப்போம்...' என்று வெகுண்டாய்.

இதனாலேயே எனக்குப் பிடித்தவனாகிப் போனாய்.

இது ஒரு பொன் மாலைப் பொழுது... என்றாய், முகிலினங்கள் அலைகின்றதே...என்றாய் என்னென்னவே சொன்னாய்... அத்தனையும் இதயத்தை அள்ளும் இலக்கியமாய் இருந்தது அன்றைய நாட்களில்.

திடீரென ஒரு நாள், ‘ஏ.... ஆத்தா... ஆத்தோரமா வாரீயா....?' என்று எங்களுக்கெல்லாம் அதிர்ச்சிவைத்தியம் அளித்தாய்.

உனக்காக அம்மாத ‘வாசல்' என்ற எங்கள் கையெழுத்துப் பிரதிமுழுக்க முழுக்க

‘வைரமுத்தா....? வயிறுமுத்தா....?'

என்று ஒரு நெருப்புக் கட்டுரையை எங்கள் மாணவர்கள் எழுதிட்டோம். உன் வகுப்பு நண்பன் எங்கள் பேராசானுக்குத்தான் அதனின் முதல் பிரதியைக் கொடுத்தோம். எஸ்.பி.கே கல்லூரி மாணவர்களும் எங்களுக்குத் தோள் கொடுத்தனர்.

சிறிது காலத்தில் உன் தண்ணீர் தேசம் படித்தேன்.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

இன்னும் எத்தனையோ.... படித்தேன்...

அவ்வப்பொழுது

‘காந்தி தேசமே காமலீலையாம்... நீதி மன்றமே நியாயம் இல்லையாம்...'
‘எவன்தான் மனிதன்....?'
போன்ற நல்ல சமுதாயப் பாடல்களையும் படைத்தாய்.

மனதினை வருடிடும் 'பூங்காற்றுத் திரும்புமா....? ஏம் பாட்ட விரும்புமா....?' படைத்தாய்.

ஒரு முறை உன்னை மூட்டா என்ற கல்லூரிப் பேராசிரியர் கூட்டத்திற்கு அழைத்திருந்தோம். மேலும் நானும் நீயும் சில இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கின்றோம்.

2001ல் கூட காமராஜர் அரங்கத்தில் ,'வைரமுத்து கவிதைகள்' என்ற உன் நூல்
வெளியீட்டு விழாவிற்குக் கூட வந்திருந்தேன்.

கலைஞர்,கமல், மண்ணின் மைந்தன் மரபு முத்தையா, பேரா ஞானசம்பந்தன்....இப்படி பல சிறப்புப் பிரமுகர்கள்....

அப்பொழுதுதான் நீ, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்' சமைத்துக் கொண்டிருந்தாய். அத்தொடர்
விகடனில் தொடராக வந்தது.

கள்ளிக்காட்டு இதிகாசத்தில், கி.ராஜநாராயணின் ‘கோபல்லபுரத்து மக்கள்' விகடனில் தொடராய் வந்தது போல் அதே தாக்கம்....!

இதிகாசத்தில் ஜீவனிருந்தது. நீயே அந்த ஜீவனாகியிருந்தாய். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தினையும் வெகு நுட்பமாக கதையில் நுழைத்தவிதம் அருமை.

‘வைரமுத்து கவிதையில்' குச்சி ஐஸ் திங்கயில... என்ற ஒரு கவிதை ஒரு ஷொட்டு. அப்படியே மண்ணின் வாசனையை நுகர முடிந்தது.

மழையின் காரணமாக எழும் மண்ணின் வாசனையைப் போல் நீ வாழ்ந்த அந்த வட்டாரத்தின் மணத்தினை நுகர முடிந்தது.

அன்றைய காலகட்டங்களில் பிரபல்யமாக இருந்த கவிஞர்களின் வரிசையில் நீயும் அவர்களைப் போல் கல்லூரிப் பேராசிரியனாக வர ஆசைப்பட்டாய்.

ஆனால் மொழிபெயர்ப்பாளனாய் ஆக்கப்பட்டாய். பாரதிராஜாவின் கடைக்கண் பட்டபின் திரைத்துறையில் ஆலமரமாகிப்போனாய். அரசு வேலையை உதறினாய்.... மேலே மேலே என உன் சிறகினை விரித்தாய்.

நான் பலமுறை யோசித்து யோசித்துப் பார்க்கின்றேன்.

வைகை அணைக்கட்டுப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் என்னைப் போல் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து விட்டு எப்படி உன் சிறகினை விரித்தாய்...? எப்படி மேலே பறந்தாய் என ஆராய்கின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைகள்.

அனைவருக்குமே தேவைகள் இருக்கின்றன. அனைவரும் உன் உயரத்தினை எட்டவில்லையே.....?

அன்று உன்னைவிட உயர்ந்த கவிஞர்களும் இருந்தனர். ஆனாலும் நான் எங்கள் முத்தமிழ்க் குழுவிலுள்ள கவிஞன் நிலாரசிகனுக்கு உன்னை மட்டுமே அவனுக்கு முன்மாதிரியாக சொல்லமுடிகின்றது....?

அது எதனால்....?

உன் உச்சிக்குக் காரணம் யார்...?

உன் காதலி பொன்முடியா....?

இல்லை.

அதன் பின் இருக்கும்
ஆழமான காதல் என்பதனை நானறிவேன்.

காதல் மட்டும் இல்லாவிட்டால்
நீ காணாமல் போயிருப்பாய்.

உன்னுள்ளிருக்கும் காதல்
அது-
வேரினைப் போல்
வெளியில் புலப்படவில்லை.

உன்-
உயரத்தைப் பார்க்கும் மக்கள்
வேரினைப் பார்க்கவில்லை.

உன்னிலிருந்து ஒரு பாடம்.
உண்மைக் காதல் என்றுமே தோற்பதில்லை..!
அது வாழ வைக்கும்..!!!

அது
உயிரினை இயங்க வைக்கும்
துடிப்பு இருக்கும்

சுயக் கட்டுப்பாடு
தானாக கைகூடிவரும்
உன்னை
உயரே... உயரே... என
உயர வைத்த அந்த
உயிர் காதலுக்கு

என் வாழ்த்துக்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் என பாரதி சும்மாவா சொல்லியிருப்பான்....?

1 comment:

வனம் said...

வணக்கம்

எல்லாம் நல்லா இருந்த்து, நானும் யோசித்த்து உண்டு வைரமுத்து அவர்களின் இந்த உயர்வுக்கு என்ன காரணம் இருக்கும் என்று.

ஆனாலும் கொஞ்சம் மரியாதையாக எழுதி இருக்கலாம்.

பாரதியைகூட சொன்னான் என்று சொல்வது இப்போது வழக்கமாக இருக்கிறது

நன்றி